ஜூன் 14 : முதல் வாசகம்
நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-10
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக் கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை.
ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment