ஜூன் 21 : முதல் வாசகம்
ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-9
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.
ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானை விட்டுச் சென்ற பொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
ஆபிராம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, “உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்” என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலி பீடத்தை எழுப்பினார்.
ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment