ஜூன் 25 : முதல் வாசகம்
உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22
ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு” என்றார்.
மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “உன் மனைவியைச் ‘சாராய்’ என அழைக்காதே. இனிச் ‘சாரா’ என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.
ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, “நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.
கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்” என்றார்.
அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment