Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, July 9, 2021

ஜூலை 10 : முதல் வாசகம்கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 29-32; 50: 15-26a

ஜூலை 10   :  முதல் வாசகம்

கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 29-32; 50: 15-26a
அந்நாள்களில்

யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்பட இருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள். அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தை கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்; அங்கேதான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."

யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, “யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழிவாங்குவார்” என்று எண்ணினர். எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார். ஆகவே, இப்பொழுது உம் தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.” அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.

அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள் பணிந்து, ‘நாங்கள் உம் அடிமைகள்’ என்றனர். யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா? நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பதுபோல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக் காப்பேன்” என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.

யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.

யோசேப்பு தம் சகோதரரிடம், “நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்” என்றார். மீண்டும் யோசேப்பு, “கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment