ஜூலை 27 : முதல் வாசகம்
ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 33: 7-11; 34: 5-9, 28
அந்நாள்களில்
மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியே உள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.
மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்று கொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர். மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார். கூடார நுழைவாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழைவாயிலில் நின்று கொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர். ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டு அகலாமல் இருப்பார்.
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, “என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.
அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகைகளின் மேல் எழுதினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment