ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்
ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 3: 7-10a, 11, 13-17.
அந்நாள்களில்
ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு” என்றார்.
யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், “இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள். வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது. உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார்.
மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும். மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகுதொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர் எதிராகக் கடந்து சென்றனர். இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment