Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, August 12, 2021

ஆகஸ்ட் 13 : முதல் வாசகம்உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன்.யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-13

ஆகஸ்ட் 13 :  முதல் வாசகம்

உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-13
அந்நாள்களில்

செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது:

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: ‘முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர். உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து, கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்; அவனது வழிமரபைப் பெருக்கினேன்; அவனுக்கு ஈசாக்கை அளித்தேன். ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்; ஏசாவுக்கு செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.

மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர் உங்களை வெளியே கொணர்ந்தேன். உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர் தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றனர். அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.

யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டு வந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக் கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன். மோவாபின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆள் அனுப்பினான். நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன்.

நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment