ஆகஸ்ட் 5 : முதல் வாசகம்
உமது செல்வமாகிய நல்ல நீரூற்றை இவர்களுக்குத் தந்தருள்வீர்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 20: 1-13
அக்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர். மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாய் இருந்திருக்குமே! ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா? இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர, எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!"
பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர்.
ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது. ஆண்டவர் மோசேயிடம், “கோலை எடுத்துக்கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறை தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்” என்றார்.
அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார். மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?” என்று கேட்டார். பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இரு முறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர்.
ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்கமாட்டீர்கள்” என்றார். இது மெரிபாவின் தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment