செப்டம்பர் 17 : முதல் வாசகம்
நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 2-12.
அன்பிற்குரியவரே,
இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம் தரும் வார்த்தைகளுக்கும், இறைப் பற்றுக்குரிய போதனைகளுக்கும் ஒத்துப்போகாதவர்கள், தற்பெருமை கொண்டவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள்; விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன.
இறைப் பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள்.
கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment