செப்டம்பர் 30 : முதல் வாசகம்
திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 1-4a, 5-6, 7b-12
அந்நாள்களில்
மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். அவ்வாறே ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர்.
திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்!ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.
ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.
எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாய் இருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள். எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment