அக்டோபர் 12 : முதல் வாசகம்
கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-25.
சகோதரர் சகோதரிகளே,
நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் - அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு. ஏனெனில் “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது.
இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதற்கு வழியே இல்லை. ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின; உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப் போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.
ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment