அக்டோபர் 20 : முதல் வாசகம்
இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18
சகோதரர் சகோதரிகளே,
உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள். பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.
அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது. எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள்.
முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment