மார்ச் 1 : முதல் வாசகம்
உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16
அன்புக்குரியவர்களே,
உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள்.
ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். ‘நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்’ என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment