பிப்ரவரி 15 : முதல் வாசகம்
கடவுள் எவரையும் சோதிப்பதில்லை.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18
அன்பிற்குரியவர்களே,
சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள்.
சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது’ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.
என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment