பிப்ரவரி 18 : முதல் வாசகம்
உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-24, 26
என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்பாரென்றால், அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.
ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன. அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? “ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.
எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது. உயிர் இல்லாத உடல் போல, செயல்கள் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment