பிப்ரவரி 6 : இரண்டாம் வாசகம்
திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11
சகோதரர் சகோதரிகளே,
உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.
நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.
நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 4: 19
அல்லேலூயா, அல்லேலூயா!
"என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment