மால்ச் 13 : முதல் வாசகம்
கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?” என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.
கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment