மார்ச் 29 : முதல் வாசகம்
கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12
அந்நாள்களில்
வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.
அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், ‘மானிடா! இதைப் பார்த்தாயா?’ என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment