மார்ச் 30 : முதல் வாசகம்
மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15
ஆண்டவர் கூறியது:
தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். சிறைப்பட்டோரிடம் ‘புறப்படுங்கள்’ என்றும், இருளில் இருப்போரிடம் ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.
பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர். அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ, அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணைகாட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.
இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.
சீயோனோ, ‘ஆண்டவர் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்’ என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment