ஏப்ரல் 10 :
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
குருத்தோலைப் பவனி நற்செய்தி வாசகம்
ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 28-40
அக்காலத்தில்
இயேசு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், “எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள்” என்றார்.
அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், “கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இது ஆண்டவருக்குத் தேவை” என்றார்கள்.
பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்: “ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!” என்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, “போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும்” என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment