மே 23 : முதல் வாசகம்
பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15
பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.
அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், “நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment