மே 7 : நற்செய்தி வாசகம்
நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69
அக்காலத்தில்
இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சீடர் பலர் இதைக் கேட்டு, “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக்கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்றார்.
நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், “இதன் காரணமாகத்தான் ‘என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்று உங்களுக்குக் கூறினேன்” என்றார்.
அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment