ஜூன் 14 : முதல் வாசகம்
இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கினாய்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29
அந்நாள்களில்
நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்.” அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, “என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய். இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாயினும், அடிமைகள் ஆயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன். நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல், உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய்.
மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரியேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்” என்றார்.
ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றுவிட்ட ஆகாபைப் போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டி விட்டாள். மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்துகொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.
அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான். அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment