ஜூன் 20 : முதல் வாசகம்
ஆண்டவர் இஸ்ரயேலைத் தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8, 13-15, 18
அந்நாள்களில்
அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர்.
ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.” ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; ‘வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது’ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment