ஜூன் 22 : முதல் வாசகம்
ஆண்டவர் திருமுன் அரசர் யோசபாத்து உடன்படிக்கை செய்துகொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 22: 8-13; 23: 1-3
அந்நாள்களில்
தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, “ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, “அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்” என்று சொன்னான். மேலும் அவன் அரசரிடம், “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்” என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான். அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.
பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்கோரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, “அரசர் இட்ட கட்டளை இதுவே: நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றார்.
அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர். அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார். அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்கு முறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment