ஜூன் 26 : நற்செய்தி வாசகம்
நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62
அக்காலத்தில்
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.
வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment