ஜூலை 18 : முதல் வாசகம்
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 1-4, 6-8
ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும். மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.
என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பி வைத்தேன்.
ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment