ஜூலை 2 : முதல் வாசகம்
என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15
ஆண்டவர் கூறுவது:
“அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போல் மீண்டும் கட்டி எழுப்புவேன். அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,” என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.
“இதோ! நாள்கள் வரப் போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்” என்கிறார் ஆண்டவர். “என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்பட மாட்டார்கள்” என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment