ஜுலை 29 : நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது.
முதல் வாசகம்
ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:
“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்'.
நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்."
ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment