ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்
என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள். நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்.
ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.
அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன்.
அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய். உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய்.
ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment