ஆகஸ்ட் 16 : முதல் வாசகம்
நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10
அந்நாள்களில்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், ‘நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்’ என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் ‘நானே கடவுள்’ என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment