ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம்
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-14
அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்."
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment