ஆகஸ்ட் 31 : முதல் வாசகம்
நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9
சகோதரர் சகோதரிகளே,
ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?
ஏனெனில், ஒருவர் ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’ என்றும் வேறொருவர் ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment