ஆகஸ்ட் 8 : முதல் வாசகம்
ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சியை நான் கண்டேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 1: 2-5, 24-28
யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு - கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது.
நான் உற்றுப் பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப் பிழம்பையும், அத்தீப் பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன். அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது.
அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப் படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன. அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.
அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும், நெருப்பு சூழ்ந்திருப்பது போன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன். சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது.
இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment