செப்டம்பர் 20 : முதல் வாசகம்
பொன்மொழிகள் பல.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6, 10-13
மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.
மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.
திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.
ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.
பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment