செப்டம்பர் 26 : முதல் வாசகம்
ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!
யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22
ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார்.
மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான்.
ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.
ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!” என்றார். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment