அக்டோபர் 11 : முதல் வாசகம்
அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை. விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன். திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய் விட்டீர்கள்; அருளை இழந்துவிட்டீர்கள்.
ஆனால் நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம். கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்துகொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment