அக்டோபர் 24 : முதல் வாசகம்
கிறிஸ்து அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32- 5: 8
சகோதரர் சகோதரிகளே,
ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.
ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
பரத்தைமை, அனைத்து ஒழுக்கக் கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர்கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை. அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும்.
ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப்பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள்மீது கடவுளின் சினம் வருகின்றது. எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்குகொள்ள வேண்டாம்.
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment