அக்டோபர் 3 : முதல் வாசகம்
இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக் கிடைத்தது.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.
சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment