அக்டோபர் 8 : முதல் வாசகம்
கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29
சகோதரர் சகோதரிகளே,
இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப் பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.
நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை. ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment