நவம்பர் 7 : நற்செய்தி வாசகம்
நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்."
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment