டிசம்பர் 13 : முதல் வாசகம்
மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2, 9-13
ஆண்டவர் கூறுகிறார்:
கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு! எந்தச் சொல்லுக்கும் அவள் செவிசாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள். எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.
எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.
இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment