15 டிசம்பர் 2022, வியாழன்
திருவருகைக்காலம் 3ஆம் வாரம்
முதல் வாசகம்
கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10
பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப் பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு; உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக்கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.
அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என அவர் அழைக்கப்படுகின்றார்.
ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.
பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.
எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment