பிப்ரவரி 1 : முதல் வாசகம்
ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-7, 11-15
சகோதரர் சகோதரிகளே,
பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: “பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்."
திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.” அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.
அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார். உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப் போகாதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment