பிப்ரவரி 20 : முதல் வாசகம்
ஞானமே எல்லாவற்றுக்கும் முன்னர் உண்டாக்கப்பட்டது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-10
ஞானமெல்லாம் ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது.
கடல் மணலையோ மழைத் துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?
எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.
ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்? ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்கு உரியவர்.
அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளை எல்லாம் அதனால் நிரப்பியவர். தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment