பிப்ரவரி 3 : முதல் வாசகம்
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 1-8
சகோதரர் சகோதரிகளே,
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. சிறைப் பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள். திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர். பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்று இருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார். இதனால், நாம் துணி வோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்ச மாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?” என்று கூறலாம்.
உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment