Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, February 6, 2023

பிப்ரவரி 7 : முதல் வாசகம்நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 20- 2: 4a

பிப்ரவரி 7 :  முதல் வாசகம்

நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 20- 2: 4a
தொடக்கத்தில் கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லா விதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.

அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment