மார்ச் 12 : முதல் வாசகம்
குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 3-7
அந்நாள்களில்
இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைநிலத்திலிருந்து இரபிதிம் வந்து அங்கு பாளையம் இறங்கினர்.
அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, ‘‘நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், ‘‘இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார்.
ஆண்டவர் மோசேயிடம், ‘‘இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக் கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் ‘மாசா’ என்றும் ‘மெரிபா’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment