மார்ச் 16 : முதல் வாசகம்
தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28
ஆண்டவர் கூறியது:
நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.
அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.
நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment