மார்ச் 18 : முதல் வாசகம்
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.
எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment